

மதுரை: கரூர் தாந்தோணி பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை ஒட்டி சேவல் சண்டை நடத்தப்படுகிறது. சேவல் கால்களில் கத்தியைக் கட்டி சண்டை போட விடுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால் வெறும் கால்களில் சேவல்களை சண்டையிட விடுவதாக சொல்லி ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சேவல் சண்டையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஆனால் இங்கு சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டியே சண்டையிட விடுகின்றனர். சேவல் சண்டைக்கு உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. சேவல் சண்டையை நடத்துபவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் விதிமீறல்களை போலீஸார் கண்டுகொள்வதில்லை. எனவே பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், சேவல் சண்டை நடத்துவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கியது எப்படி? என கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.25-க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.