

கோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை 12 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “கோவையில் தினமும் சராசரியாக 7 ஆயிரம்முதல் 9 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை 12 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், 33 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 152 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு வாட்ஸ்அப் குழு உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் எந்தெந்த இடங்களில் கரோனா தொற்று உள்ளது என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் கரோனா தொற்று தடுப்பு பணிகளில் 2,206 மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். மேலும், 1,105 மருத்துவப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால்சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களையும், எல்லையோரம் உள்ள 11 சோதனை சாவடிகளில் சோதனை நடைபெறுவதையும் கண்காணிக்கும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக படுக்கைகளையும், சிங்காநல்லூர் கூட்டுறவு அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.