Published : 12 Jan 2022 08:46 AM
Last Updated : 12 Jan 2022 08:46 AM

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு: ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு

சேலம் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக கோயில் மண்டபத்தில் லட்டு உருட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் நாளை (13-ம் தேதி) வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் கடந்த 2-ம் தேதி பகல் பத்து உற்ஸவத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வருகிறது. பகல் பத்து கடைசி நாளான இன்று (12-ம் தேதி) அழகிரிநாதர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். நாளை (13-ம் தேதி) சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வளாகம் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காலை 5 மணிக்கு நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

பக்தர்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து இலவச தரிசனம் அல்லது ரூ.25 கட்டண தரிசனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் கோட்டை அரசு மகளிர் பள்ளி அருகே அமைக்கப்படும் நுழைவு வாயில் வழியாக இலவச தரிசனத்துக்கும், குண்டுபோடும் தெருவில் அமைக்கப்படும் நுழைவு வாயில் வழியாக கட்டண தரிசனத்துக்கும் கரோனா விதிகளை பின்பற்றி வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையில், சேலம் பட்டை கோயில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க கோயில் மண்டபத்தில் நேற்று லட்டு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x