

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காக சென்னை காசிமேட்டில் 570 படகுகளை கையாளும் வகையில் மீன்பிடி துறைமுகம் கடந்த 1980-ல் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, காசிமேடு துறைமுகத்தில் தினமும் 2 ஆயிரம் விசைப் படகுகள், சிறிய படகுகள் கையாளப்படுகின்றன. இதனால் கடுமையான இடநெருக்கடி ஏற்படுகிறது.
இதுதவிர, இந்த துறைமுகத்தில் இருந்து அண்மை கடல் மட்டுமின்றி, ஆழ்கடல் மீன்பிடி பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆழ்கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த மீனுக்கு ஏற்றுமதி தேவைகளும் அதிகமாக உள்ளன. எனவே, ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்தவும் சூரை வகை மீன்களை அதிக அளவில் பிடித்து ஏற்றுமதி செய்யவும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் இடநெருக்கடியை குறைக்கவும் வசதியாக சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.200 கோடி மதிப்பில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்துறைமுகத்தில் 849 மீட்டர் நீளம் தெற்கு அலை தடுப்பு சுவர், 550 மீட்டர் நீளம் வடக்கு அலை தடுப்பு சுவர், 550 மீட்டர் நீளம் பெரிய மற்றும் சிறிய படகு அணையும் தளம், 550 மீட்டர் நீளம் தடுப்புச் சுவர், 163 சதுர மீட்டர் மீன்பிடி துறை நிர்வாக கட்டிடம், 258 சதுர மீட்டர் வலை பின்னும் கூடம், 300 சதுர மீட்டர் சிறுமீன்கள் ஏலக்கூடம், 765 சதுர மீட்டர் ஆழ்கடல் மீன் ஏல விற்பனைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. துறைமுக கட்டுமானப் பணிகளை இம்மாதம் முடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பணியில் தொய்வு ஏற்பட்டது. எனவே, திருவொற்றியூர் துறைமுகம் கட்டுமானப் பணி நிறைவடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கரோனா தொற்றுப் பரவல் உள்ளிட்ட காரணங்களால் திருவொற்றியூர் துறைமுகம் கட்டுமானப் பணிகளை கடந்த ஆண்டு மேற்கொள்ள முடியாமல் தடைஏற்பட்டது. கரோனா பரவல் குறைந்தபிறகு பணிகள் தொடங்கி வேகமாகநடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீதமான பணிகள் முடிவடைந்துள்ளது. இம்மாதத்தில் பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால், கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, பணிகளை நடப்பாண்டு இறுதிக்குள் முடித்து மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.