

பொங்கலை முன்னிட்டு அதிக வரவேற்புடன் நடக்கும் புதுச்சேரியின் மாட்டு சந்தைக்கு கரோனாவால் மாடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகளும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு கிராமத்தில் செவ்வாய்தோறும் நடைபெறும் மாட்டு வாரச்சந்தை மிக பிரபலமானது.
பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் இருந்து 2 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களூர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பழங்கால முறைப்படி கையில் துண்டு போட்டு பேரம் பேசி விற்கப்படுகிறது.
புதுச்சேரியின் அடையாளமாக திகழும் இந்த மாட்டுச் சந்தைக்கு தமிழகம் - புதுச்சேரி வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். இங்கு வாரந்தோறும் 1,500 மாடுகள் வரை விற்பனையாகும்.
தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக மிகவும் குறைவான மாடுகள் விற்பனைக்கு வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மாட்டு வியாபாரி சக்கரவர்த்தி என்பவர் கூறுகையில், “விவசாயத்தோடு மாடுகளை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவுகளை கவனிக்கி"றோம். பொங்கல் வியாபாரம் இங்கு பிரபலம். ஆனால் கரோனாவால், இம்முறை மக்களே மாடு வாங்க வரவில்லை. மாடுகளும் அதிகளவில் வரவில்லை. மாட்டு பொங்கலையொட்டி அதிகளவில் விற்பனை நடக்கும் என எதிர்பார்த்து வந்து ஏமாந்துள்ளோம். தமிழகத்தில் ஊரடங்கும் இதற்கு ஓர் காரணம்” என்றார்.
மாடுகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் இருசப்பன் என்பவர் கூறுகையில், “சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்ததால் மாட்டுக்கு தேவையான கயிறு, சலங்கை, சாட்டை போன்றவை விற்கவில்லை” என்று வருத் தத்துடன் குறிப்பிட்டார்.