Published : 23 Apr 2016 08:30 AM
Last Updated : 23 Apr 2016 08:30 AM

வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டம்: தமாகா தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை வெளியிட்டார். தமாகா தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். மது ஆலைகளை மூட நடவடிக்கை எடுப்பதோடு, டாஸ்மாக் பணியாளர்களுக்கு வேறு வேலை வழங்கப்படும். வேலைக்கு ஆட்கள் தேவை என்று பலகைகள் ஒருபுறமும், வேலை வேண்டும் என்று இளைஞர்கள் மறுபுறமும் இருக்கின்ற சூழல் உள்ளது. இந்த இரண்டையும் இணைக்கிற முயற்சியில் எங்கள் கூட்டணி அரசு ஈடுபடும்.

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும். கிருஷ்ணா நதி நீரை சேமிக்க சத்தியமூர்த்தி சாகர் மாதிரி இன்னொரு நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சென்னை- புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நீராதாரங்களில் கலப்பதை தடுப்போம். அரசுப்பள்ளிகள், கல்லூரிகளின் தரம் தனியாருக்கு இணையாக உயர்த்தப்படும். கேந்திரிய வித்யாலயா போன்று பள்ளிகள் உருவாக்கப்படும். இ-காமராஜர் என்னும் கணினி கல்வித்திட்டம் தொடங்கப்படும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளிக்கல்வியில் தொழிற்கல்வி திட்டம் சேர்க்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அந்த கடனை மாநில அரசே ஏற்கிற வண்ணம் தனி நிதியம் அமைக்கப்படும்.

தமிழகம் மின் மிகை மாநிலமாக்கப்படும். கிராமம்தோறும் விவசாய இணையதளத் தகவல் மையம் அமைக்கப்படும். விவசாயிகள் பயிர்க்கடன் உபகரணக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆதி திராவிடர்கள் தொழில் தொடங்க தனி நிதியம் அமைக்கப்படும். ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். ஜனநாயக மாண்பு காக்க மாணவர் பேரவை தேர்தல்கள் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முறையாக நடத்தப்படும். சட்டப்பேரவை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 120 நாட்கள் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டமேலவை அமைக்கப்படும். ஊழலை ஒழிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காகவும், தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காகவும் பாடுபடுவோம்.

இதேபோல், வெளிநாட்டு வேலை தேடுவோர் நலன், போக்குவரத்து, அடுக்குமாடி கார் நிறுத்தம், வருவாய் நிர்வாக சீர்திருத்தம்,தரிசுநில மேம்பாடு, மரபுசாரா எரிசக்தி, நிலத்தடிநீர் ஆதார மேம்பாடு, எத்தனால் பயன்பாடு, பத்திரிகையாளர் நல வாரியம் போன்ற அம்சங்களும் தமாகா தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அரசியல் கட்சிகள் தருகிற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தமாகா தேர்தல் அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x