

அரியலூரில் புதியதாக கட்டப்பட் டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று(ஜன.12) காணொலிக் காட்சி மூலம் டெல்லியிலிருந்து திறந்து வைக்கிறார்.
அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2020 ஜூலை 7-ம் தேதி அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அப்போதைய முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.
இங்கு, தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் கூடிய கல்லூரி, வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக் கல்லூரி முதல்வ ருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம், மாணவர்கள் மற்றும் மாணவிக ளுக்கு தரைத்தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட கட்டிடம், பேராசிரியர்கள், உதவிப் பேராசி ரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இதனிடையே, மருத்துவ கல்லூரிகளுக்கான மத்தியக் குழு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இந்த மருத்துவக் கல்லூரி உட்பட தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
நீண்டகால கோரிக்கை நிறைவேறுவதால் அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.