Published : 11 Apr 2016 07:53 AM
Last Updated : 11 Apr 2016 07:53 AM

அதிமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல்

அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கூட்டணி தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை 2 முறை சந்தித்து பேசினேன். தொடர்ந்து, அவர் கூறியபடி அமைச்சர்களையும் பலமுறை சந்தித்து பேசினேன். வாழ்வுரிமை கட்சி சார்பில் முதலில் இரட்டை இலக்க தொகுதி கேட்கப்பட்டது. இறுதியாக தமிழகத்தில் 5, புதுச்சேரியில் 1 தொகுதி கேட்டோம்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் எங்கள் கட்சி இடம் பெறவில்லை. அதன்பிறகும் பலமுறை தொடர்ந்து பேசினோம். எங்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் அதிமுக உடன்படவில்லை. என்னை கூட்டணி தலைவராக நினைத்திருந்தால், நாளை (11-ம் தேதி) விருதாச்சலத்தில் நடக்கும் கூட்டத்துக்கு அழைத்திருப்பார்கள். ஆனால் அழைக்கவில்லை. எனவே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன். திமுக, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அழைப்பு வந்தபோதும் அவர்களிடம் பேசவில்லை. எனது அடுத்தகட்ட முடிவை நெய்வேலியில் 12-ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பேன். மீண்டும் ஜெயலலிதாவிடம் இருந்து நேரடியாக அழைப்பு வந்தாலும் பொதுக்குழு கூட்டத்தில் பேசித்தான் முடிவெடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x