Published : 11 Jan 2022 03:41 PM
Last Updated : 11 Jan 2022 03:41 PM

கரூரில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, சிலைகள் மீட்பு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கரூர் : கரூர் மாவட்டம் செங்காளிபாளையத்தில் தனியார் நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, சிலைகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் அருகேயுள்ள செங்காளிபாளையத்தில் தனியார் நிலத்தில் பழங்கால கல்வெட்டுகள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று (ஜன. 10-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கல்வெட்டு குறித்து ஆட்சியர் கூறியது, "கரூர்-அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை மேற்குப் பகுதியில் அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது செங்காளிப்பாளையம். இங்கு சிவன், பெருமாள் கோயில்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. சிவன் கோயிலின் செவ்வக வடிவிலான தனிக்கல்லின் ஒரு பக்கத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தமிழும் கிரந்தமும் கலந்த எழுத்து வடிவில் 13 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முதல் 10 வரிகளில் தானம் பற்றிய செய்தியும், இறுதியாக உள்ள 3 வரிகளில் வடமொழி வாழ்த்து சுலோகமும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டு கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என்று அருங்காட்சியகத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வெட்டில், ஸ்ரீதென்னவன் வஞ்சிவேள் ரவிகுவான் மனைவி நிறந்தேவி தன் கணவரிடமே 50 பொன் கொடுத்து விலைக்கு நிலம் பெற்று நிலத்தினை கீழ்குடையூர் சிவன் கோயில் மகாதேவருக்கு நந்தா விளக்கு எரிப்பதற்காகவும், திரு அமுது படைப்பதற்காகவும், தானமாக வழங்கிய செய்தி பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதில் வஞ்சி என்பது கரூவூரைக் குறிக்கும் என்றும், வேள் என்பதற்கு ஒளி பொருந்திய தலைவன் அல்லது வேளிர் குலத்தலைவன் என்று பொருள் கொள்ளலாம் என்றும், வஞ்சி வேள் என்பது வஞ்சி நகரை ஆண்ட வேளிர் குலத் தலைவன் என்று பொருள்படும் என்றும் கூறப்படுகின்றது, வஞ்சி மாநகரான கரூர் சில காலம் வேளிர் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கலாம். வஞ்சி ஆண்ட அந்த வேளிர் வஞ்சிவேள் என்று அழைக்கப்பட்டனர். கரூர் கி.பி. 1-ம் நூற்றாண்டில் இருந்து கரூவூர் எனவும் வஞ்சி எனவும் அழைக்கப்பட்டுள்ளது.

இவை, கருவூர் பொன்வாணிகன் நத்தி அதிட்டானம் என்று புகழிமலை (தமிழ்-பிராமி) கல்வெட்டில் இருந்தும், கோ கலியன் மகன் கருவூரிடை தந்நாநிரை கொளல் எரிந்து பட்டான் என்ற கரூர் மாவடியான் கோவில் கல்வெட்டில் இருந்தும், ஸ்ரீ வஞ்சிவேள் அடியான் என்ற கரூர் நடுகல் கல்வெட்டில் இருந்தும், வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை என்ற புறநானூற்று வரிகளில் இருந்தும் பண்டைய காலங்களில் இன்றைய கரூர், கரூவூர் என்றும் வஞ்சி என்றும் வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இப்பகுதியில் உள்ள கல்வெட்டு, சிற்பங்களைப் பாதுகாப்பாக, உடைந்து விடாதபடி எடுத்து கரூர் அருங்காட்சியத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் மூலம் இந்தக் கல்வெட்டு மற்றும் இப்பகுதியினை ஆய்வுக்குட்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், கரூர் அருங்காட்சியகக் காப்பாட்சியர் மணிமுத்து, மண்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x