

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17-ல் நடைபெறும் என்று ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மாநில அரசு, கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நிகழ்ச்சிக்கு வரக்கூடிய நபர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், கரோனா இல்லை என்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கமான தை மூன்றாம் நாள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைக்காக விழாக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்தார்.
ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் கலந்தாலோசித்த பிறகு மதுரை மாவட்டஆட்சியர் அனிஷ் சேகர் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதுகுறித்து மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் கூறியுள்ளதாவது:
''தற்போது தமிழக அரசு விடுத்திருக்கிற கூடுதல் வழிமுறைகள், வரும் ஞாயிறு அன்று, முழு ஊரடங்கு அறிவித்ததன் காரணமாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வரும் ஞாயிறு நடைபெறுவதாக இருந்தது. முழு ஊரடங்கு நடைபெறுவதால் அன்று இந்நிகழ்வை நடத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஊர் மக்கள் மற்றும் விழாக்குழுவினருடன் கலந்தாலோசித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் திங்கள் கிழமை ஜனவரி 17ஆம் நாள் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம். இதனை அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பதற்காக இந்தச் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறைய கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதனுடன் மிகச் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இதற்கான பார்வையாளர்களுக்கான ஆன்லைன் பதிவு இன்று 3 மணியிலிருந்து நாளை 5 மணி வரை நடைபெறும். பாரம்பரிய முறைப்படி தை முதலாம் தேதி அதாவது ஜனவரி 14-ல் மதுரை அவனியாபுரத்திலும், 15-ல் பாலமேட்டிலும், 17-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். மூன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்துதான் ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் பதிவில் பங்கேற்பதற்கான பதிவின் அடிப்படையில் முன்னுரிமை அனுமதி வழங்கப்படும்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் இதில் பார்வையாளர்கள் எதற்கு முன்னுரிமை அளித்துப் பதிவு செய்கிறார்களோ அதன் அடிப்படையில் பதிவு செய்யலாம். மேலும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 150 பார்வையாளர்கள் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு நிகழ்விலும் அனுமதிக்கப்படுவார்கள். வெளியூர் பார்வையாளர்கள் என்றாலும் வழங்கப்பட உள்ள பாஸ் (அனுமதிச் சீட்டு) என்ற அடிப்படையில்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்.