தமிழக உளவுத்துறை முதல் பெண் ஐஜியாக நியமனம்: ஆசியம்மாள் சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி

ஆசியம்மாள்
ஆசியம்மாள்
Updated on
1 min read

தூத்துக்குடி: தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு முதல் பெண் ஐஜியாகஆசியம்மாள் நியமிக்கப்பட்டுஉள்ளதால், அவரது சொந்த கிராமமான தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. உளவுத்துறை ஐஜியாகஆசியம்மாள் (56) நியமிக்கப்பட்டுஉள்ளார். உளவுத்துறையில் கடந்த 7 மாதங்களாக டிஐஜியாக பணியாற்றி வந்த ஆசியம்மாள், பதவி உயர்வில் அதே துறையின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறை ஐஜியாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. மிகவும் திறமையான அதிகாரிகளே இந்த பதவிக்கு நியமிக்கப்படுவர். தற்போது ஆசியம்மாள் அந்த பணியிடத்துக்கு வந்துள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

வைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சியைச் சேர்ந்த ஜக்கரியா - முகைதீன் பாத்திமா தம்பதியரின் மூத்த மகள் ஆசியம்மாள். 2-ம் வகுப்பு வரை கொங்கராயக்குறிச்சியில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். தொடர்ந்து தந்தையின் பணி காரணமாக சென்னை சென்று படித்துள்ளார். தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக விரைவிலேயே திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருமணத்துக்குப் பின்புதான் காவல்துறை பணிக்கு வந்துஉள்ளார். இவரது கணவர் மரைக்காயர், சங்கர் சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

எம்எஸ்சி, எம்டெக் மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் பட்டங்களை பெற்ற ஆசியம்மாள், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று காவல்துறை பணிக்கு வந்தார். வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியைத் தொடங்கிய அவர், தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும்

இதுகுறித்து கொங்கராயக்குறிச்சியில் வசிக்கும் அவரது தாய்மாமா ரகுமதுல்லா கூறும்போது, ‘எனது அக்காவுக்கு 5 பெண் பிள்ளைகள். மூத்தவர் ஆசியம்மாள். இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு அவரின் கடின உழைப்பே காரணம். இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது' என்றார்.

உறவினர் கமல் பாஷா கூறும்போது, ‘எங்கள் உறவுக்கார பெண் தமிழக காவல்துறையில் உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அவரது கடின உழைப்பும், உயர்வும் எங்கள் பகுதி இளைஞர்கள், பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in