

புதுக்கோட்டை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் இருந்தபோதும், தற்போது நீட் தேர்வின் அடிப்படையில் இருக்கும்போதும் மருத்துவப் படிப்பில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்களுக்கான அரசின் இட ஒதுக்கீட்டால்தான், அவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வேண்டிய நிலை உள்ளது. எனவே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்தில்இருந்து 10 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டுமானால், தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில வேண்டிய நிலை உள்ளது. எனவே, தமிழக அரசே பயிற்சி மையங்களை தொடங்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதேசமயம், என்னைப் பொறுத்தவரை நீட் தேர்வு தேவையற்றது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழர்கள் நலனுக்காக தமிழக காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்றார்.