Published : 11 Jan 2022 06:47 AM
Last Updated : 11 Jan 2022 06:47 AM

அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக சென்னையில் 180 ஆட்டோக்களுக்கு அபராதம்

சென்னை: பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 180 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காரணம் காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மீட்டர் பொருத்தாதது, அதிக வேகமாக இயக்குவது, மதுஅருந்து விட்டு ஆட்டோக்களை ஓட்டுவது போன்ற விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்து ஆணையர் சி.நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை ஆணையர் அ.ரவிச்சந்திரன் கூறியதாவது:

போக்குவரத்து ஆணையரின் உத்தரவைத் தொடர்ந்து, சென்னையில் வடக்கு மற்றும் தெற்கு சரகத்தில் பணிபுரியும் ஆர்டிஓக்கள் (வட்டார போக்குவரத்து அலுவலர்கள்) மற்றும் வாகன ஆய்வாளர்கள் கோயம்பேடு, அம்பத்தூர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், கொளத்தூர், தாம்பரம், ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர், அசோக்நகர், தி.நகர், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, திருவான்மியூர், வேளச்சேரி, மந்தைவெளி, ராயப்பேட்டை, விருகம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு நடத்தினர். ஆயிரக்கணக்கான ஆட்டோக்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் விதிகளை மீறிய 180 ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 44,750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x