Published : 11 Jan 2022 10:46 AM
Last Updated : 11 Jan 2022 10:46 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாதடுப்பூசி பூஸ்டர்டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது.

கடலூர் கந்தசாமி நாயுடு கலைக் கல்லூரியில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்ளுக்கு கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தும் முகாமை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சியர் கூறியது:

கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து96 ஆயிரத்து 625 நபர்கள் கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தகுதியுள்ளவர்கள் ஆவர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சத்து 86 ஆயிரத்து 900 நபர்களும், 15 வயது முதல் 18 வயதுடைய 76 லட்சத்து 639 நபர்களும் ஆக மொத்தம் 21 லட்சத்து 63 ஆயிரத்து 539 நபர்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 16 லட்சத்து 25 ஆயிரத்து633 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதேபோல் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தும் முகாமை ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ஆட்சியர் மோகன் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள் உட்பட மொத்தம் 1,04,493 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர்.

தற்போதுவரை, விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 95.5 சதவீதம் பேர் முதல் தவணையும், 67.5 சதவீதம் பேர் 2- வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 252 கிராம பஞ்சாயத்து்களில் 100 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 66.9 சதவீதம்பேர் முதல்தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 136 பேர் ஒமைக்ரான் தொற்றாலும், 121 பேர் டெல்டா தொற்றாலும் என மொத்தம் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டுமே 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் காலங்களில் கரோனா தொற்று அதிகரிக்கும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள காரணத்தினால் 7 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வார்டுகளை அமைத் துள்ளோம் என்றார். இம்முகாமில். மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரமன்றத்தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம் எல் ஏ புஷ்பராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களை கரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்ட 9,800 நபர்களுக்கு 01.06.2021-க்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x