

வாணியம்பாடியில் மணல் கடத்தலை தடுக்க 35 அடி நீளத்தில் மெகா பள்ளம் வெட்டி மணல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்த வட்டாட்சி யருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மணல் கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது.
வாணியம்பாடி வட்டத்தை ஒட்டியுள்ள கொடையாஞ்சி, தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை, கச்சேரி சாலை, ஜாப்ராபாத், அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மணல் திருட்டு நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். கனிம வளம் கொள்ளை போவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து பாலாற்றின் வளத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வாணியம்பாடி கச்சேரி சாலையை ஒட்டியுள்ள பாலாற்றுப்பகுதியில் இருந்து தினசரி டன் கணக்கில் ஆற்று மணல் அள்ளப்பட்டு பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதாக வாணியம்பாடி வருவாய்த் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன்தலைமையில், பொதுப்பணித் துறை நீர்வளத்துறை உதவியாளர் பாஸ்கரன், மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய்த் ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் கச்சேரி சாலை பகுதியில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மணல் கடத்தலுக்காக கச்சேரி சாலை வழியாக பாலாற்று பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் அங்கிருந்து மணலை கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மணல் திருட்டை தடுக்க பாலாற்றுப் பகுதியை ஒட்டி 5 அடி அகலத்திலும், 8 அடி ஆழத்திலும் சுமார் 35 அடி நீளத்துக்கு மெகா பள்ளம் ஒன்றை வெட்ட வட்டாட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
அதன்படி, ‘பொக்லைன்’ கொண்டு வரப்பட்டு மெகா பள்ளம் வெட்டப்பட்டது. இதன் மூலம் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வரும் வாகனங்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாலாற்றில் மணல் திருட்டு தடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வட்டாட்சியர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.