

சென்னை: வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள சென்னை விமான நிலையம் தயார் நிலையில் இருப்பதாக விமான போக்குவரத்து ஆணையத்தி்ன கார்ப்பரரேட் தகவல் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய, விமான போக்குவரத்து ஆணையத்தி்ன கார்ப்பரரேட் தகவல் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை விமான நிலையத்தின் எல்லை, குறிப்பிட்ட தூரம் வரை அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ள அபாயத்தை சந்திக்கிறது.
தற்போது, அடையாற்றில் நீர் மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க, தானியங்கி கருவிகள் இரண்டாவது ஓடுதள பாலம் அமைந்திருக்கும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருவி அடையாறு ஆற்றில் நீர்மட்டத்தை பதிவு செய்யும். அது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.
ஆற்றில் தண்ணீரின் அளவு 9.5 மீட்டர் எம்எஸ்எல் அளவைக் கடந்தால் (பாலத்தின் உயரம் 10.5 மீட்டர் எம்எஸ்எல்) இந்தக் கருவி கட்டுப்பாட்டு அறையில் எச்சரிக்கை ஒலியை எழுப்பும் மற்றும் விமான நிலைய ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் 10 பேரின் செல்போன் எண்களுக்கு எச்சரிக்கை தகலை அனுப்பும்.
இந்த வசதி பொருத்தப்பட்டதன் மூலம், வெள்ள அபாயம் ஏற்படுவதற்கு முன்பாக முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கான எச்சரிக்கையை சென்னை விமான நிலையம் பெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.