அய்யா வழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம் கிளை | கோப்புப் படம்.
மதுரை உயர் நீதிமன்றம் கிளை | கோப்புப் படம்.
Updated on
1 min read

மதுரை: மண்டைக்காடு கோயில் தீ விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அய்யா வழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அய்யா வழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார், 'தேவபிரசன்னம் பார்க்காமல் தமிழ் பாரம்பரியம் அடிப்படையில் கோவிலை புனரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இதையடுத்து, மதநம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக சிவகுமார் அளித்த புகாரின் பேரில் பாலபிரஜாபதி அடிகளார் மீது மண்டைக்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று பிறப்பித்த உத்தரவு:

'மனுதாரர் இந்து மதத் தலைவர்களில் ஒருவர். அவருக்கு தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் ஒரு கோயிலை புனரமைக்கலாம் என கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை அடிப்படையில் மனுதாரர் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதனால் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in