

வடசென்னை தொகுதி தேர்தல் அலுவலகம், பேசின் பிரிட்ஜ் மாநகராட்சி துணை ஆணையர் அலுவலகத்தில் செயல்படுகிறது. தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.
தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் 4 பேருக்கு மேல் வரக்கூடாது. அனுமதியின்றி பேரணியாக வரக்கூடாது. கொடிகளுடனோ, கும்பலாகவோ வரக்கூடாது என விதிகள் உள்ளன.
கடந்த 1ம் தேதி அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு மனுதாக்கல் செய்ய வந்த போது, பலர் கும்பலாக கட்சிக் கொடிகளுடன் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீ ஸாருக்கு தேர்தல் அதிகாரி எம்.லட்சுமி பரிந்துரைத்தார்.
மேலும் விதிமீறலைப் பதிவு செய்யும் வகையில், தானியங்கி சுழல் கேமராக்கள், தேர்தல் அலுவலக நுழைவு வாயில் முதல் உள் அறை வரை பொருத்தப்பட்டு, நேரலையாகக் கண்காணிப்பு மற்றும் பதிவுகளும் செய்யப்படுகின்றன. கும்பலாக யாரையும் உள்ளே விட வேண்டாமென போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், வியாழக்கிழமை காலையில் தேர்தல் அலுவலகத்துக்கு போலீஸார் பணிக்கு வராததால், யார் வேண்டு மென்றாலும் கட்டுப்பாடின்றி உள்ளே வரும் நிலை ஏற்பட்டது. இதனால் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் பலர் கும்பலாக தேர்தல் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். இதை நேரலையாக திரையில் பார்த்த தேர்தல் அதிகாரி எம்.லட்சுமி உடனடியாக பாதுகாப்புப் பணிக்கு வருமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். பின்னர், போலீஸ் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி தலைமையில் ஏராளமானோர், தேர்தல் அலுவலகத்துக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்தே தேர்தல் அலுவலகம் சகஜ நிலைக்குத் திரும்பியது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழ் மாநிலக் கட்சி தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, ஏராளமானோர் பேரணியாக வந்ததால், அவர்களை ஒழுங்கு படுத்தும் பணிக்கு தேர்தல் அலுவ லகத்திலிருந்த போலீஸார் சென்று விட்டதால், தேர்தல் அலுவலக வளாகத்தில் போலீஸ் இல்லாத நிலை ஏற்பட்டது” என்றார்.
வடசென்னை தொகுதிக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் தமிழ் மாநிலக் கட்சி வேட்பாளர் பால்கனகராஜ் உள்பட 12 பேர் மனுதாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, மாற்று வேட்பாளர் வி.மஞ்சுளா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகி மாற்று வேட்பாளர் கிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் நிஜாம் முகைதீன் உள்பட 21 பேர் மனுதாக்கல் செய்தனர்.