விலையோ ரூ.33, கிடைப்பதோ ரூ.13; கரும்பு விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்குமா தமிழக அரசு? - ராமதாஸ்

மருத்துவர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்.
மருத்துவர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்.
Updated on
2 min read

சென்னை: "வெட்டப்பட்ட கரும்புகள் வீணாகும் நிலை உள்ளது. விலையோ ரூ.33; கிடைப்பதோ ரூ.13; பழிவாங்கப்படும் விவசாயிகளின் கண்ணீரைத் தமிழக அரசு துடைக்க வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொங்கல் பரிசுக்கான கரும்பு கொள்முதலில் நடந்த குளறுபடிகள் கரும்பு விவசாயிகளை, குறிப்பாக கடலூர் மாவட்ட பொங்கல் கரும்பு விவசாயிகளைக் கவலையிலும், கண்ணீரிலும் ஆழ்த்தியிருக்கிறது. உழவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாமல் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அரசுத்துறை அதிகாரிகளே அவர்களின் பாதிப்புகளுக்குக் காரணமாகியிருப்பது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

இடைத்தரகர்கள் சதித்திட்டம்: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழாவையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பையுடன் ஒரு முழுக் கரும்பும் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து வழங்கி வருகிறது. பொங்கல் பரிசுக்கான கரும்புகள் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்த தமிழக அரசு, பின்னர் கடலூர் மாவட்ட உழவர்களின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் கரும்புகள் உழவர்களிடமிருந்து அதிகபட்சமாக ரூ.33 என்ற விலையில் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால், பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில், இதுவரை உழவர்களிடமிருந்து ஒரு கரும்பு கூட நேரடியாகக் கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் அதிகார வர்க்கமும், இடைத்தரகர்களும் தீட்டிச் செயல்படுத்திய சதித்திட்டம்தான்.

தமிழ்நாட்டில் மிக அதிகமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 5,000 லாரிகளில் ஏற்றும் அளவுக்கு கரும்பு விளைந்துள்ளது. ஆனால், இதுவரை 100 லாரிகள் அளவுக்கு மட்டும்தான் கரும்புகள் இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள கரும்புகள் தோட்டங்களிலும், சாலைகளிலும் வாடிக்கொண்டிருக்கின்றன.

அரசு நேரடியாக வாங்க வேண்டும்: பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அரசிடம் விற்பனை செய்வதற்காக இடைத்தரகர்கள் சிலர், பெரும்பான்மையான உழவர்களிடம் ஒரு கரும்புக்கு அதிகபட்சமாக ரூ.13 என்று விலை பேசி முன்பணம் கொடுத்து வைத்திருந்தனர். பொங்கல் பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, கடலூர் மாவட்ட உழவர்கள் தங்களிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை அரசும் ஏற்றுக்கொண்ட நிலையில் உழவர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.

கைவிடப்பட்ட நிலை: மற்றொரு பக்கம் கரும்புக்கு அதிகபட்ச விலையாக ரூ.33 நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, இடைத்தரகர்களிடம் வாங்கப்படும் கரும்புக்கு ரூ.18-க்கு மேல் வழங்க அதிகாரவர்க்கம் மறுக்கிறது. உழவர்களிடம் ஒரு கரும்பை ரூ.13க்கு வாங்குவதாக ஒப்புக்கொண்டு முன்பணம் கொடுத்த இடைத்தரகர்கள், அதன் பின்னர் போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட செலவுகளையும் செய்து அனைத்துக்கும் சேர்த்து இறுதியாக அவர்களுக்கு ரூ.18 மட்டுமே கிடைக்கும்போது அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை; ஒரு கரும்புக்கு ரூ.3 அல்லது ரூ.4 வரை இழப்பு ஏற்படுகிறது. அதனால் இடைத்தரகர்கள் கரும்பு கொள்முதல் செய்வதைக் கைவிட்டு ஒதுங்கிவிட்டனர்.

ஒருபுறம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள இடைத்தரகர்கள் மறுப்பது, மற்றொரு புறம் விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பைக் கூட அதிகாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யாதது ஆகியவைதான் கரும்பு உழவர்களின் கண்ணீருக்குக் காரணமாகும்.

வெட்டப்பட்டு வீணாகும் கரும்புகள்: கடலூர் மாவட்டத்தில் விளைந்த கரும்புகளில் 3500 லாரிகளில் ஏற்றக்கூடிய அளவு பொங்கல் பரிசுக்காகக் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 100 லாரி கரும்புதான் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 50 லாரி கரும்புகள் வெட்டப்பட்டு கொள்முதல் செய்யப்படாமல் காய்ந்து கொண்டிருக்கின்றன. வெட்டப்படாமல் இருக்கும் கரும்புகளைப் பொங்கல் திருநாளுக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடியாது. தேவையை விடப் பல மடங்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருப்பதால், பொங்கலையொட்டி கரும்பின் விலை தரைமட்டத்திற்குச் சென்றுவிடும் என்பது மட்டுமின்றி, வாங்குவதற்கும் ஆள் இருக்காது. அதை நினைத்து தான் கடலூர் மாவட்ட விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். மற்ற மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது.

உழவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய பெருங்கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. உழவர்களிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் பல இடங்களில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்படவில்லை. இன்னும் சில இடங்களில் ஒரே கரும்புத் துண்டு போடப்பட்டு 3 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெட்டி வைத்துள்ள கரும்புகள், இன்னும் வெட்டப்படாத கரும்புகள் ஆகியவற்றைத் தமிழக அரசு உடனடியாக அதிகபட்ச விலைக்குக் கொள்முதல் செய்ய வேண்டும். பொங்கல் பரிசு போக மீதமுள்ள கரும்புகளைக் கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். அதன் மூலம் உழவர்களின் துயரைப் போக்கி, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச் செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in