

சென்னை: பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும். அவமானப்படுத்த முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் - வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலைக்கு சனிக்கிழமை இரவு (8.1.2022) அடையாளம் தெரியாத சிலர் செருப்பு மாலை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவைக் கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்துக்குத் தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் பரவலான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், "ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.