

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான “நெட்” தகுதித் தேர்வுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல், சமூகவியல் உள்ளிட்ட இலக்கியம் மற்றும் கலைப் பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய அளவில் “நெட்” தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜுன், டிசம்பர்) நடைபெறும் இத்தேர்வினை சிபிஎஸ்இ நடத்துகிறது.
முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 50 சதவீத மதிப்பெண் போதும்.
நெட் தேர்வுக்கு வயது வரம்பு கிடையாது என்றாலும் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் (ஜெஆர்எப்) தகுதிக்கு மட்டும் வயது வரம்பு 28 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஜெஆர்எப் தகுதிபெறுவோர் உதவி பேராசிரியர் பணிக்கும் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான முதலாவது நெட் தேர்வு ஜூலை 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைனில் (www.cbsenet.nic.in) விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு மே 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.