

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்கிடையே, கரோனா பரவல் அதிகரிப்பதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பொங்கலுக்கு அதிகஅளவில் புறப்பட்டுச் செல்வார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11-ம் தேதி (நாளை) முதல் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரிஇயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட 3 நாட்களில் 10,468 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக கேட்டபோது,அரசு போக்குவரத்து கழகஅதிகாரிகள் கூறியதாவது: பொங்கலையொட்டி ஏற்கெனவே அறிவித்தபடி, வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். பேருந்து நிலையங்களில் கரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு சற்றுகுறைவாக இருக்கிறது. ஏற்கெனவே, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், பயணிகளின் தேவைக்கு ஏற்பசிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கே.கே.நகர் (ஈசிஆர் வழியாக புதுச்சேரி, சிதம்பரம்), மாதவரம் (ஊத்துக்கோட்டை, ஆந்திரா மாநில பேருந்துகள்), தாம்பரம் ரயில் நிலையம் (திருவண்ணாமலை, கடலூர்), தாம்பரம் அறிஞர்அண்ணா பேருந்து நிலையம் (கும்பகோணம், தஞ்சாவூர்), பூந்தமல்லி (வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி) மற்றும் கோயம்பேட்டில் இருந்து இதர மற்றும் தென்மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும்.
எனவே, மக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துகளில் பயணம்செய்ய வேண்டுகிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10,468 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படும். நாளை முதல் இந்தபேருந்துகளை இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.