Published : 10 Jan 2022 05:57 AM
Last Updated : 10 Jan 2022 05:57 AM

மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி முழு ஊரடங்கால் முடங்கியது தமிழகம்; சாலைகள் வெறிச்சோடின: தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு

சென்னை: கரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தமிழகமே முடங்கியது. சாலைகள் வெறிச்சோடின. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் உரிய கட்டுப்பாடுகளுடன் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜன.3-ம் தேதி கரோனா பரவல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கில் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜன.6-ம்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் ஒருநாள் முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதலே காவல்துறையினர் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். மாநிலம் முழுவதும் மாவட்ட எல்லைகள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர எல்லைப் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. அதேபோல மாவட்டங்களுக்குள்ளும் முக்கிய நகர எல்லைகள், சாலை சந்திப்புகளில் காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இருப்பினும், அத்தியாவசியத் தேவைகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் ஆகியவை நேற்று இயங்கவில்லை. முன்கூட்டியே பயணங்களுக்கு பதிவு செய்திருந்தவர்கள் விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த வாகனங்களையும் வாடகை வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வாறுபயணிப்பவர்களிடம் இருந்து பயணச்சீட்டை பரிசோதித்து அனுமதித்தனர். ஆனால், வாடகை வாகனங்கள் இயக்கம்குறைவு, கட்டணம் அதிகரிப்பு, காவல்துறையினரின் கெடுபிடி போன்ற காரணங்களால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. மின் வணிக நிறுவனங்கள், வீடுகளுக்கு உணவு விநியோகிப்பவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெருவோரத்தில் வசிப்போர், ஆதரவற்றவர்களுக்கு உணவுகிடைக்கவில்லை. முந்தைய ஊரடங்கின்போது அவர்களுக்கு பலரும் உதவி செய்த நிலையில், நேற்று அதுபோன்ற உதவிகள் கிடைக்காமல் பரும் சிரமத்துக்குள்ளாகினர்.

அதேபோல், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் ஊரடங்கின்போது அனுமதிஅளிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களை காட்டி தங்கள் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். திருமண மண்டபத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா கட்டுப்பாட்டு விதிமீறல்கள் இருந்த மண்டபங்களுக்கு அபராதம்விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் நேற்று முன்தினம் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கின்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் புறநகர் பகுதிகளில் மக்கள் இயல்பாக நடமாடியதை காண முடிந்தது. ஆனால், சென்னைநகரப் பகுதியில் காவல்துறையினரின் கெடுபிடி காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழுமையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மெரினா கடற்கரை, காசிமேடு மீன் சந்தை மற்றும் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, எப்போதும் பரபரப்பாக காணப்படும் வர்த்தகப் பகுதியான தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பாஜார் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வந்திறங்கியவர்கள் புறநகர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் ரயில் நிலையத்திலேயே தங்கி இருந்தனர்.

அத்தியாவசியப் பணிகள் தவிர தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட 31 மணி நேர முழு ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணியுடன் முடிவுக்குவந்தது. இதனிடையே கரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை முதல்வர் இன்றுமாலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x