Published : 10 Jan 2022 07:35 AM
Last Updated : 10 Jan 2022 07:35 AM

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கரோனா பரவல் கட்டுப்படுத்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று 3-வது அலையாக பரவத்தொடங்கியுள்ளதால், இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுக்கடைகள் குறித்து அரசு வாய் திறக்கவில்லை. மூன்றே நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,862-ல் இருந்து 10,978 ஆக உயர்ந்துள்ளது. மதுக்கடைகள் செயல்பட அரசு அனுமதித்து இருப்பதுதான் இதற்கு காரணமாகும்.

அதிமுக ஆட்சியில் 2020-ம்ஆண்டு மே மாதம் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 580 ஆக இருந்த நிலையிலேயே, டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் கருப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

ஆனால், தற்போது திமுக ஆட்சியில் 12,772 பேர் ஒரு நாளைக்கு பாதிக்கப்படும்போதும் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருபக்கம் பள்ளி, கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத் தலங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து விட்டு, மதுக்கடைகளை திறந்து வைப்பது தொற்றை கட்டுப்படுத்த உதவாது.

எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, பரவலின் தாக்கம் 5 சதவீதத்துக்குகீழ் செல்லும் வரையிலாவது மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நோய் பரவலுக்கு வழிவகுக்கும்

கரோனா பரவலை தடுக்க மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலைத்தடுக்க அத்தியாவசிய சேவைகளுக்குகூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் அத்தியாவசியம் இல்லை. ஆனால், கட்டுப்பாடுகள் இன்றி அவை செயல்படுகின்றன. அவை உடனடியாக மூடப்பட வேண்டும். மதுக்கடை பார்கள்தான் கரோனா பரவல் மையங்களாக திகழ்கின்றன. ஆனாலும், அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடையும், பார்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x