Published : 10 Jan 2022 07:29 AM
Last Updated : 10 Jan 2022 07:29 AM

நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு 3-வது இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நீர் மேலாண்மையில் அகில இந்தியஅளவில் தமிழகம் 3-வது இடத்துக்கான விருது அறிவிக்கப்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடு குறித்து இத்துறையின் சிறப்புக் குழு மாநிலவாரியாக கள ஆய்வு மேற்கொள்கிறது. சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டுஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை ஜல்சக்தித் துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான விருதுகளில் (தென்மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்தையும், சிறந்த பள்ளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த தொழில் பிரிவில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2-ம் இடத்தையும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில், விருது அறிவிக்கப்பட்ட தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பள்ளிக்கல்வித் துறைகள்,தொண்டு நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றை சேர்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் தனது பாராட்டுகளையும், வாழ்த்து களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிறந்த கிராமபஞ்சாயத்துக்கான விருதுகளில் செங்கல்பட்டு வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x