

கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வெள்ளலூரில் திராவிடர் கழகத்துக்கு சொந்தமான தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்தின் நுழைவுவாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பெரியார் சிலைக்கு காலணி மாலை அணிவிக்கப்பட்டு, சிலையின் தலையில் காவிப்பொடி தூவப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த படிப்பக நிர்வாகிகள் போத்தனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெரியார் சிலைக்கு காலணி மாலை அணிவித்து காவிப்பொடியைத் தூவியது தெரிந்தது. இதையடுத்து, இரு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்புடைய நபரை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் சார்பில் வெள்ளலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் அதன் பொதுச்செயலர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் காந்திபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த அலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.
தலைவர்கள் கண்டனம்
பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இந்த விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு குற்றவாளிகள், அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான், இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன்: இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமான சமூக விரோத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய சம்பவங்கள் தொடராமல் தடுக்க முடியும்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும். அவமானப்படுத்த முடியாது.
இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.