Published : 10 Jan 2022 10:34 AM
Last Updated : 10 Jan 2022 10:34 AM

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் சைனீஸ் காய்கறிகளின் விலை 10 மடங்கு உயர்வு: மகசூல் குறைந்ததால் லாபமின்றி தவிக்கும் விவசாயிகள்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் சைனீஸ் காய்கறியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வெளி மாநில வியாபாரிகள் குறைந்தஅளவிலேயே கொள்முதல் செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகளிடம் மகசூல் இல்லாததால், அவர்களும் லாபமின்றி தவிக்கின்றனர்.

தேயிலை, காபி உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் நிறைந்த நீலகிரிமாவட்டத்தில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பட்டாணி, டர்னிஃப்ஆகிய மலை காய்கறிகளும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. அதே வேளையில், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பெர்க், செலரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன், ஜூக்னி, ரெட் கேபேஜ் உள்ளிட்ட சைனீஸ் காய்கறிகளையும் பயிர் செய்து சந்தைப்படுத்தும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதகை, கோத்தகிரி பகுதிகளில் விவசாயிகள் பலர் சைனீஸ் காய்கறிகளை விளைவிக்கின்றனர். குறிப்பாக கொதுமுடி கிராமத்தில் அதிகளவில் சைனீஸ் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பெய்த மழையால், சைனீஸ் காய்கறி விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு வரத்து வெகுவாக குறைந்து, நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது.

உதகையில் உள்ள மொத்த ஏல மையத்தில் வழக்கமாக ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்பனையாகி வந்த ஜூக்னி, தற்போது ரூ.120-க்கும், ரூ.70-க்கு விற்பனையாகி வந்த புரூக்கோலி ரூ.220-க்கும் ஏலம் போகிறது.

மேலும், ரூ.40 முதல் 50-க்கு விற்பனையாகி வந்த ஐஸ் பெர்க் ரூ.230-க்கும், ரூ.30 முதல் 40-க்கு விற்பனையாகி வந்த செலரி ரூ.200 முதல் 220 வரையிலும், ரூ.40-க்கு விற்பனையான லீக்ஸ் ரூ.300-க்கும், பார்ஸ்லி ரூ.380-க்கும், லெட்யூஸ் ரூ.200 வரையும் விலை உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக கொதுமுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமன் கூறும்போது, "உதகை, கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சைனீஸ் காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இந்தவகை காய்கறிகள் நட்சத்திர உணவகங்களில் துரித உணவுகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கக்கூடிய சைனீஸ் காய்கறிகள் கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

மழை காரணமாக சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால், அதிக விலை கொடுத்து வாங்க வெளி மாநிலவியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகளிடம் மகசூல் இல்லாததால், அவர்களுக்கும் எந்த லாபமும் இல்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x