

நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை பார்வையிட தினமும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பரவலால், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களின்பார்வை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. உதகை அரசு பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறை, சில மாதங்களாகத்தான் மெல்ல புத்துயிர் பெற்று வந்தது. இந்நிலையில், சுற்றுலா தலங்களின் பார்வை நேரம் குறைப்பு, ஞாயிறன்று முழு முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் சுற்றுலா துறை பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள்கூறும்போது, "ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு முழு முடக்கம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களின் பார்வை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வருபவர்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட காலை 10 மணி வரை காத்திருக்க வேண்டும். மதிய உணவு அருந்திவிட்டு, பலர் மாலையில் பூங்காக்களை கண்டுகளிக்க விரும்புவர். ஆனால், மதியம் 3 மணிக்கே சுற்றுலா தலங்கள் மூடப்படுவதால், அவசர, அவசரமாக சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வெளியேற வேண்டியுள்ளது.
சுற்றுலாவை சார்ந்தவர்கள், சிறுவியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் வருவாய் இழக்கும்நிலை உள்ளது. காலை 10 மணி வரை சுற்றுலா பயணிகள் காத்திருக்க வேண்டி உள்ளதால்தான் கூட்டம் அதிகரிக்கிறது, கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட பின்னர் என்ன செய்வது என தெரியாமல் சுற்றுலா பயணிகள்சாலைகளில்தான் சுற்றித்திரிகின்றனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் என்பதால்,சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், நீலகிரிமாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள்வருகை குறைந்துவிடுவதுடன், சுற்றுலா துறையும் பாதிப்புக்குள்ளாகும்" என்றனர்.