Published : 03 Apr 2016 04:59 PM
Last Updated : 03 Apr 2016 04:59 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதலீட்டாளர்களின் நண்பனாக மாற்றப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதலீட்டாளர்களின் நண்பனாக மாற்றப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சென்ற நிதியாண்டு தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் சூறாவளித் தாக்குதலுக்கு உள்ளான வருடமாக அமைந்து விட்டது கவலையளிக்கிறது.

மொத்த ஏற்றுமதியில் 40 சதவீத ஏற்றுமதி யூரோவை நம்பியிருப்பதால், யூரோ மதிப்பு சரிவால் ஏற்பட்ட அதிர்வலைகள் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களின் நிதி ஆதாரத்தை அசைத்துப் பார்த்துவிட்டது மட்டுமின்றி, அந்த நிறுவனங்களை அச்சுறுத்தியும் விட்டது.

பின்னலாடை வர்த்தக தேக்கத்தின் விளைவாக தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மேற்கு தமிழகத்தில் இருக்கும் கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. கடந்த ஐந்து வருட அதிமுக ஆட்சியில் மாநிலத்திற்கு வரவேண்டிய முதலீடுகளும் குறைந்து விட்டன. ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளும் வேறு மாநிலங்களுக்கு தலைத் தெறிக்க திரும்பி ஓடிக் கொண்டிருக்கின்றன.

உலக அளவிலான பொருளாதார தேக்க நிலைமை பின்னாலடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளை மட்டுமின்றி சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களையும் மீளாப் பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனால் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 85 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருக்கிறார்கள். இன்றைக்கு பல பகுதிகளில் இன்ஜினீயரிங் படித்து விட்டு ஓட்டுநர்களாக பணியாற்றும் சோகக் கதைகளை கேட்கும் நிலை தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உருவாகி விட்டது.

ஆகவே, மாநிலத்தில் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் தொழில் துறை உடனடியாக மீட்கப்பட வேண்டும். அதற்கு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் முறை மாநிலத்தில் நடைமுறையில் இருந்தாலும், அது முற்றிலும் அதிமுக ஆட்சியில் செயலிழந்து விட்டது.

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சுற்றுப்புறச் சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய மிக முக்கிய பணியாகும். ஆனால், அதிமுக அரசு இதையெல்லாம் செய்யாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, கருணாநிதி தலைமையிலான கழக அரசு அமைந்தவுடன் தேய்ந்து கொண்டிருக்கும் தொழில் வளர்ச்சியை தேற்றுவதற்கும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.கருணாநிதி தலைமையிலான கழகம் ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முதலீட்டாளர்களின் நண்பனாக மாற்றப்படும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x