அன்புமணி வெற்றியை கொண்டாட தமிழகம் தயார்: ராமதாஸ் பேச்சு

அன்புமணி வெற்றியை கொண்டாட தமிழகம் தயார்: ராமதாஸ் பேச்சு
Updated on
1 min read

மே 22-ம் தேதி தமிழக மக்கள் அன்புமணி பதவியேற்பு விழாவை கொண்டாட தயாராகி விட்டனர் என்று தருமபுரி பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசினார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர் களை ஆதரித்து நேற்று முன்தின மும், நேற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். நேற்று முன் தினம் மாலை தருமபுரி மாவட்டம் அரூர் பொதுக்கூட்டத்தில் பேசி னார். பின்னர் தருமபுரி அருகே யுள்ள சோலைக்கொட்டாய் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியது:

மற்ற அரசியல்வாதிகளைப் போல பேசும் குணம் என்னிடம் இல்லை. என் பேச்சு எப்போதுமே வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போலத்தான் இருக்கும். இரு திராவிட கட்சிகளுக்கும் தமிழக மக்களின் நிலை என்ன? தேவை என்ன? என்பதைப் பற்றி எதுவுமே தெரியாது. இதை முழுமையாக அறிந்த கட்சி பாமக தான். தமிழக மக்கள் அனைவரின் தேவைகள், மக்கள் பிரச்சினை கள் உள்ளிட்ட அனைத்தும் அன்புமணிக்கு தெரியும்.

பாமக ஆட்சி அமைந்தால், பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மதுவிலக்கு உடனடியாக அமலுக்கு வரும். மரக்காணம் கலவர சம்பவத்தின்போது ஜெயலலிதா என் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து 12 நாட்கள் திருச்சி சிறையில் அடைத்தார். பின்னர் அதே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 22 நாட்கள் அடைக்கப்பட்டார். விரைவில் அவர் அதே சிறைக்கு அல்லது திகார் சிறைக்கு செல்லப் போகிறார்.

அதேபோல, திமுக என்பது பட்டுப்போன மரம்; அது இனிமேல் துளிர்க்காது. ஊழல் மகாராஜாவான கருணாநிதியும், ஊழல் மகாராணியான ஜெய லலிதாவும் இனி ஆட்சிக்கு வர முடியாது. தமிழகத்தில் 180 தொகுதிகளில் உறுதியாகி இருந்த பாமக-வின் வெற்றி தற்போது 220 தொகுதிகளாக அதிகரித்துள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளை நாமே இதர கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து விடுவோம். ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையில் அமர யாராவது வேண்டும்.

நீண்ட காலமாக தமிழகத்திற்கு கோடம்பாக்கத்துடன் தொடர் புடையவர்களே முதல்வர்களாக வந்துள்ளனர். ஆனால் இந்த முறை தருமபுரி மண்ணில் இருந்து முதல்வர் வரப்போகிறார். அன்புமணியின் வெற்றி உறுதியாகி விட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் வெற்றிச் சான்றிதழ் வாங்குவது மட்டுமே பாக்கி. மே 22-ம் தேதி அன்புமணி தமிழக முதல்வராக பதவியேற்கும் வெற்றிவிழா நாளன்று தமிழக மக்கள் எம்பி எம்பி குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பெண்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்த உள்ளனர்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வேலுசாமி, மாநில நிர்வாகி அரசாங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in