சென்னையில் ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு; ரோந்துப் பணியில் 10,000 போலீஸார்: தடையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
சென்னை: தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி, சென்னையில் 10,000 போலீஸார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ட்ரோன் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தடையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் நேற்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 312 வாகன தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, ரோந்து வாகனங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புறநகர்ப் பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. குளம், ஏரிக்கரைகள், ஊர்களை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் கூடியவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து, அவர்களை விரட்டும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு நூறடி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபும் சாலை உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர்கள் செந்தில்குமார், கண்ணன் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தனர்.
எனினும், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், தினசரி பத்திரிகை விநியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள், பெட்ரோல், டீசல் பங்க்-கள் ஆகியவை வழக்கம்போல இயங்க அனுமதிக்கப்பட்டது. உணவகங்களில் காலை 7 முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள் பங்கேற்கச் செல்வோர், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைக் காண்பித்து, தங்களது பயணங்களை மேற்கொண்டனர்.
ரயில், விமானம் மூலம் வெளியூர் செல்வதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தவர்கள், அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகளின் நகல்களை வைத்துக்கொண்டு செல்லுமாறு காவல் ஆணையர் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து, ஆட்டோ, டாக்சிகளில் உரிய ஆவணங்களை ஆய்வுசெய்த பின்னரே, அவற்றுக்கு போலீஸார் அனுமதி அளித்தனர். அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்கள், போலியான டிக்கெட் நகல் வைத்திருந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
