Published : 10 Jan 2022 07:19 AM
Last Updated : 10 Jan 2022 07:19 AM

முழு ஊரடங்கால் அம்மா உணவகங்களில் குவிந்த மக்கள்: கூடுதலாக சமைத்து விநியோகித்த மாநகராட்சி

சென்னை: சென்னையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான உணவகங்கள், சாலையோர உணவகங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் அம்மா உணவகங்களுக்கு சென்று உணவருந்தினர்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள், பெட்டிக் கடைகள், டீ கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் சமையலறை இல்லாத அறைகளில் தங்கியுள்ள மாணவர்கள், தொழிலாளர்கள், தனியாக வசித்து வரும் முதியோர், சாலையோரம் வசிக்கும் வீடற்றோர் உள்ளிட்டோர் உணவுக்காக நேற்று அம்மா உணவகங்களை நாடினர். இதனால் பல அம்மா உணவகங்களில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதுதொடர்பாக சென்னை பிராட்வே பகுதியில் சாலையோரம் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் கூறும்போது, “வழக்கமாக பிற நாட்களில் ஏதாவது வேலை இருக்கும். எங்களுக்கு வருமானம் வரும். அதில் பணம் கொடுத்து பெரிய உணவகங்களில் சாப்பிடுவோம். சில நேரங்களில் வேலை அளிப்பவரே உணவுக்கும் ஏற்பாடு செய்துவிடுவார். இதுபோன்ற ஊரடங்கு நாட்களில் வேலையும் இல்லை. வருமானமும் இல்லை. அதனால் அம்மா உணவகங்களுக்கு உணவருந்த வந்திருக்கிறோம்" என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "சென்னையில் 403 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இன்று கூட்டம் அதிமாக இருக்கும் என்பதால், அந்தந்த உணவகங்களில் சூழலுக்கு ஏற்றவாறு கூடுதலாக உணவு சமைப்பதை, அந்தந்த சுகாதார ஆய்வாளர்களே முடிவெடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலையில் வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, மதியம், இரவு உணவின் அளவை தீர்மானித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

உணவருந்த வரும் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து உணவை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து உணவகங்களிலும் உணவு பற்றாக்குறை ஏற்படவில்லை. உணவு கிடைக்காமல் யாரும் திரும்பிச் செல்லவில்லை" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x