

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானை அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரைக்கு அடுத்தபடியாக பூவந்தியில் அதிகளவில் மண்பாண்டப் பொருட்கள் தயாராகின்றன. இங்கு சீசனுக்கு ஏற்ப அகல் விளக்கு, அக்னிச் சட்டி, கூஜா, சமையல் சட்டி, பொங்கல்பானை உள்ளிட்ட மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
வைகை ஆற்றின் குறு மணலும், அப்பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணையும் குழைத்து பயன்படுத்தி மண் பாண்டங்களைத் தயா ரிக்கின்றனர். 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை யாலும், கண்மாய்களில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் மணல், மண்ணுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பூமி ஈரமாக இருந்ததால் தாமதமாகத் தான் பொங்கல் பானை தயாரிப்பு பணியை தொடங்கினர். இதனால் ஆர்டர்களுக்கு ஏற்ப பானைகளை தயாரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
வியாபாரிகள் ரூ.60-ரூ.70க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டை விட ரூ.10 முதல் ரூ.20 வரை விலை சற்று உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பூவந்தியைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது:
மக்களின் ஆர்வத்தால் சில ஆண்டுகளாக பானை விற்பனை அதிகரித்துள்ளது. தினமும் ஒரு குடும்பத்தினர் 40 முதல் 50 பானைகள் மட்டுமே தயாரிக்க முடியும் என்றார்.