காளையார்கோவில் அருகே இடிந்துவிழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.
இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.
Updated on
1 min read

காளையார்கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை இடித்து அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கோலாந்தி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீர் விநியோகிக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு தாயமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இந்த தொட்டி முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும்நிலையில் உள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. தற்போது தெருக்குழாய்கள் மூலம் நேரடியாகவே மக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜல்சக்தி திட்டத்தில் அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. சேதமடைந்த பழைய தொட்டியை இடிக்க ஓராண்டுக்கு முன்பே காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தொட்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள், அப்பகுதியில்தான் விளையாடுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in