Last Updated : 01 Apr, 2016 05:46 PM

 

Published : 01 Apr 2016 05:46 PM
Last Updated : 01 Apr 2016 05:46 PM

செல்போன், பணத்தை பறிகொடுத்த மூதாட்டியிடம் ‘வெற்றிலை - மை’ கேட்ட போலீஸார்

திருச்சியில் செல்போன், ரூ.500 பணத்தைப் பறிகொடுத்த மூதாட்டியின் புகாரைப் பதிவு செய்யாமல், அவரிடம் போலீஸார் ‘வெற்றிலை- மை’கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள குட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அழகுபிள்ளை(75). தனது 16-வது வயதில் கணவர் அம்மாசியுடன் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பெரிய தோட்டத்துக்கு வேலைக்கு வந்துள்ளார். அவரது கணவர் மற்றும் 3 மகன்கள், 2 மகள்கள் ஆகியோர் இறந்துவிட்டதால், டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை வளாகத்தில் தங்கியுள்ளார்.

நன்றாகப் பாடும் அவர், வானொலி நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டுப்புற பாடல்களைப் பாடி ஊக்கத் தொகை பெற்றுள்ளார். அப்போது, வானொலி நிலைய ஊழியர் உதவியுடன், ரூ.1,500 விலையில் செல்பொன் வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன், ரூ.500 ரொக்கம், செல்போன் ஆகியவை வைத்திருந்த அவரது பையை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து புகார் அளிக்க கே.கே. நகர் காவல் நிலையம் சென்றபோது, 4 நாட்களுக்கு மேலாக அவரை அலைக்கழித்துள்ளனர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கச் சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர், பாட்டு பாடுமாறு அழகுபிள்ளையிடம் கேட்டுள்ளார். அந்தக் காவலரைத் திட்டிவிட்டு, அழகுபிள்ளை அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

பின்னர், மீண்டும் கே.கே. நகர் காவல் நிலையம் சென்றபோது, அங்கிருந்த காவலர்கள், புகாரை ஏற்றுக் கொள்ளாததுடன், “வெற்றிலையும் மையும் கொண்டு வா பாட்டி, செல்போன் எங்கிருக்குனு பார்த்து விடலாம்” என்று கிண்டல் செய்துள்ளனர். மேலும், செல்போன் கிடைத்தால் கூப்பிடுகிறோம் என்று கூறி, அங்கிருந்து அவரை அனுப்பிவிட்டனர். அன்றாடம் வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வரும் அழகுபிள்ளையின் பிரச்சினையைக் கேட்காமல், அவரை அலட்சியப்படுத்தியது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, “அவர் ஒருநாள் மட்டுமே இங்கு வந்தார். செல்போனைக் காணவில்லை என்றதால், வேறொரு செல்போன் கொடுக்க முன்வந்தோம். ஆனால், தனது செல்போன்தான் வேண்டும் என்று கூறியதுடன், புகார் எழுதித் தரவும் மறுத்துவிட்டார். பின்னர், சாப்பிட பணம் கொடுத்தோம். அதை வாங்கிக் கொண்டு, சென்றுவிட்டார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x