

புதுச்சேரி: மாணவர்களுக்காகப் பயிற்சி அளிக்கத் தொடங்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டுத் திடலில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டும் விளையாடி வரும் சூழலை மாற்றி மாணவர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு ஆளுநர், முதல்வருக்கு மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி கோரிமேடு, இந்திரா நகரில் ஐஏஎஸ் குடியிருப்புகளுக்கு அருகே கல்வித்துறையின் சார்பில் டென்னிஸ் பயிற்சி மையம் என்ற பெயரில் டென்னிஸ் விளையாட்டுத் திடல் ஒன்று உள்ளது. இங்கு பயிற்சி அளிக்கும் நேரம், மற்ற பிற விவரங்கள் ஏதுமின்றி பகல் நேரங்களில் எப்பொழுதும் பூட்டிய நிலையிலேயே இருந்ததால், இந்த டென்னிஸ் விளையாட்டுத் திடல் குறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டார்.
இதையடுத்து ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோரிடம் அளித்த மனு விவரம்:
"கடந்த 2006ஆம் ஆண்டு 3.55 லட்சத்தில் டென்னிஸ் பயிற்சி மையம் சிறார்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப் பயிற்சியாளர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை, மாணவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று கல்வித்துறை பதில் தந்ததுள்ளது.
கல்வித்துறை சார்பில், கல்வித்துறையின் நிதியில் மாணவர்களுக்கு டென்னிஸ் விளையாட்டுப் பயிற்சி அளிக்க அமைக்கப்பட்ட இந்த டென்னிஸ் விளையாட்டுத் திடல், தற்போது உயர் அதிகாரிகளின் டென்னிஸ் விளையாடும் திடலாக மாறிப்போனது.
குறிப்பாக முன்பிருந்த கல்வித்துறைச் செயலர் ஒருவரின் வாய்மொழி உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே இந்த டென்னிஸ் பயிற்சித் திடலைப் பயன்படுத்தி வரப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தற்போது ஐஏஎஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டும் விளையாடி வரும் வகையில் உள்ளது.
மாணவர்களுக்கான பயிற்சி மையம் எனப் பெயர்ப் பலகை வைத்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டும் டென்னிஸ் திடலைப் பயன்படுத்தி வருவது ஏற்புடையதல்ல. ஐஏஎஸ் அதிகாரிகளும் அரசு ஊழியர்கள்தான். மாணவர்களுக்கான டென்னிஸ் விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஆரம்பிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டுத் திடலை மாணவர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு மனுவில் ரகுபதி தெரிவித்துள்ளார்.