

புதுச்சேரி: பொங்கலையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பரிசு வழங்கப்படும் எனப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி புதுச்சேரி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள நியாய விலைக் கடையில் 10 பொருட்கள் கொண்ட இலவசப் பொருட்களைப் பொதுமக்களுக்குக் கொடுத்து இன்று மதியம் தொடங்கி வைத்தார்.
நாளை முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கலையொட்டி, பச்சரிசி-2 கிலோ; வெல்லம் -1 கிலோ; து.பருப்பு -1 கிலோ; கடலைப்பருப்பு -1/2 கிலோ; பச்சைப்பருப்பு -1/2 கிலோ; உளுந்து -1/2 கிலோ; மஞ்சள் -100 கிராம்; முந்திரி -50 கிராம்; திராட்சை -50 கிராம்; ஏலக்காய் -10 கிராம் அடங்கிய 10 பொருட்கள் இலவசமாகப் பொங்கல் பரிசுத் தொகுப்பாகத் தரப்படுகிறது.
இந்நிகழ்வில் குடிமைப்பொருள் அமைச்சர் சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், தொகுதி எம்எல்ஏ ரமேஷ், அரசு செயலர் உதயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.