

மாவட்ட எல்லைகளை சீரமைக்கவும், பெரிய மாவட்டங்களை பிரிக்கவும் மாவட்ட மறுவரையறை ஆணையம் அமைக்க வேண்டும் என்றுமுதல்வருக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆட்சியில் காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்கள் 11 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் நிகழ்ந்த சிலதவறுகள், நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சில சட்டப்பேரவைத் தொகுதிகள் எல்லைகள், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் அடங்காமல், அண்டை மாவட்டங்களில் பரந்துள்ளன.
இதனால், தொகுதி மேம்பாட்டு நிதியை இரு மாவட்டஆட்சியர்கள் மூலம் செலவழிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு, மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
மேலும், அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும். எனவே, தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒருமாவட்டம் என்ற அளவில்,அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க வேண்டும்.
மாவட்ட எல்லைகள் மறுசீரமைக்கப்படும்போது, பேரவைத் தொகுதிகளின் எல்லைகள், அந்தந்த மாவட்ட எல்லைக்குள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மாவட்ட மறுவரையறை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.