Published : 09 Jan 2022 06:58 AM
Last Updated : 09 Jan 2022 06:58 AM

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டை கட்டமைத்த பெருமை மத்தியில் ஆளும் பாஜகவையே சாரும்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் கட்டமைத்த முழு பெருமையும் மத்தியில் ஆளும் பாஜகவையே சாரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

2015-ல் சலோனி குமார் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் 27 சதவீதஇடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக கூறியது. எனவே, 2015-ம் ஆண்டிலேயே பாஜக அரசு தனது கொள்கை முடிவை தெளிவாக எடுத்துரைத்துவிட்டது.

தற்போது யார் யாரோ உறக்கம் கலைந்து, தங்களால்தான் 27 சதவீதஇடஒதுக்கீடு கிடைத்தது என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோதே, இதை செய்திருக்கலாமே.

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மத்திய அரசு தனது கொள்கைமுடிவை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததால், இந்த இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் கட்டமைத்த முழு பெருமையும் பாஜகவுக்கு மட்டுமே உண்டு. பிரதமர் மோடியே உண்மையான சமூக நீதி காவலர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2007 ஜன.4-ம் தேதி திமுக, பாமக அங்கம் வகித்த காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு,கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என சட்டம்கொண்டு வந்தபோது, அது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிட்டு, அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிபிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்காதது ஏன்?

மேலும், 2014 வரை எந்த வழக்கும், தடையும் இல்லாத நிலையில், 6 ஆண்டுகள் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு குறித்து வாய்மூடி மவுனமாக இருந்தது ஏன்? 1986 முதல் அமலில் உள்ளஅகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த 34ஆண்டாக ஓபிசிக்காக குரல் கொடுக்காத திமுக, அதை நிறைவேற்ற தயார்என்று பாஜக அரசு முடிவெடுத்ததை அடுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை, தங்கள் அரசியலுக்கு சாதகமாக்கிக் கொள்ள முனைவது அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x