

கரோனா தொற்றை தடுப்பதில் தமிழகம் மேம்பட்டு இருப்பதால், முழு ஊரடங்கு தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை பேரியக்கமாக கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஊட்டச்சத்து தொடர்பாக நகர்ப்புற மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே ‘ஊட்டச்சத்து தாவரம் மற்றும் விழிப்புணர்வுத் தோட்டம்' அமைக்கப்பட்டுள்ளது. இதை சுகாதாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்துவைத்தார்.
இதில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானிசவுமியா சுவாமிநாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றை எப்படி தடுக்க வேண்டும் என்பதில் தமிழகஅரசு நல்ல அனுபவம் பெற்றிருக்கிறது. நாம் தடுப்பூசி போடுவதில் நல்ல நிலையில் இருக்கிறோம். அதனால், தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவையில்லை.
நல்ல வேளையாக, ஒமைக்ரான்வகையால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே தெரிகிறது. ஆனாலும் 4 மடங்கு வேகமாக பரவுவதால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த வைரஸ்ஒழியப்போவது இல்லை. நம்மோடுதான் இருக்கப்போகிறது. ஆனால், அது பெருந்தொற்றாக மாறாமல் இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எம்.சீனிவாச ராவ், இயக்குநர் (சுற்றுச்சூழல்) எம்.நாச்சியப்பன், அசன் மவுலானா எம்எல்ஏ,எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை முதன்மை விஞ்ஞானி என்.பரசுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.