

சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின், அருப்புக்கோட்டை அருகே நேற்று காலை மின் கம்பிகளில் சிக்கியது. இதனால் 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை அருப்புக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது.
தொட்டியாங்குளம் பகுதியில் ரயில் சென்றபோது இன்ஜினில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி பார்த்தபோது ரயில் மின்பாதைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகள் அறுந்து இன்ஜினில் சிக்கி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மதுரை ரயில் நிலையத்துக்கும், விருதுநகர் ரயில் நிலையத்துக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே பணியாளர்கள் இன்ஜினில் சிக்கியிருந்த மின் வயர்களை அகற்றினர். இதையடுத்து, சுமார் 3 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.
திருட்டு முயற்சி?
மானாமதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக, விருதுநகர் வரை தற்போது ரயில் பாதையை மின் மயமாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருட முயற்சித்தபோது, இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிலம்பு எக்ஸ்பிரஸ் தாமதமாகச் சென்றதால் விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலும், அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு புறப்பட்டது.