Last Updated : 09 Jan, 2022 07:14 AM

 

Published : 09 Jan 2022 07:14 AM
Last Updated : 09 Jan 2022 07:14 AM

பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் கிராமங்களில் சிறப்பு தூய்மை இயக்கம்: குப்பை அள்ளி, வர்ணம் பூசி, நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்ய அரசு உத்தரவு

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர் பிரவீன் பி.நாயர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஊராட்சிகளுக்குச் சொந்தமான கட்டிடங்களை பராமரிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டுக் காலம் அதிகமாகிறது. எனவே, வரக்கூடிய பொங்கல் திருநாளையொட்டி அனைவரின் பங்களிப்புடன் ஊரகப் பகுதிகளில் ஒரு சிறப்பு இயக்கமாக பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 3 ஆண்டுகளுக்கு முன்பு வர்ணம் பூசப்பட்ட ஊராட்சிமன்ற கட்டிடங்கள், ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மீண்டும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் வைக்க வேண்டும்.

மாதந்தோறும் 5 மற்றும் 20-ம்தேதிகளில் குடிநீர் நீர்த்தேக்கதொட்டிகளை சுத்தம் செய்ய ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசுக்களால் பரவும் நோய்களை முழுவதுமாக தடுக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சந்துகள், தெருக்கள், கிராம சாலைகள், கிராமங்களை ஒட்டிச் செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றிலுள்ள குப்பையை ஊராட்சியிலுள்ள பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டு, முற்றிலுமாக அகற்றி சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வடிகால்கள் மற்றும் சாக்கடை செல்லும் வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கி, சுத்தப்படுத்தி கொசு மருந்து தெளித்து டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஊராட்சிக்கு 100 மரக்கன்றுகள்

ஊராட்சி மன்ற கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றியக் கட்டிடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய,பயன்படுத்த இயலாத பொருட்களை முற்றிலும் அகற்றி, அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுதவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், பள்ளிகட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் போன்ற இடங்களில் வேம்பு, புங்கன், மா, கொய்யா போன்ற பலன்தரும் மரக்கன்றுகளை ஊராட்சிக்கு 100 வீதம் நட வேண்டும்.

இதுதவிர கிராமங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், முகக் கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x