

இந்திய கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜத்துக்கு, டைம் சர்வதேச மாநாட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கணித அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஒன்று கூடி விவாதிப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டைம்’ (TIME -Technology and Innovation in Math Education) என்ற சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கணித கல்வியில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு ‘நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படும்.
அதன்படி 10-வது டைம் மாநாடு கரோனா பரவலால் கடந்த டிசம்பர் மாதம் இணையவழியில் நடைபெற்றது. இதில் புதுமையான கற்பித்தல் முறைகள், தொழில்நுட்பங்களுடன் கணிதத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், இந்த மாநாட்டில் கணித பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு ‘நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பேராசிரியர் ராமானுஜம் சென்னை தரமணியில் அமைந்துள்ள இந்திய கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். கணிதக் கல்வியில் எண்ணற்ற புதிய முயற்சிகளையும், கற்பித்தலில் எளிய முறைகளையும் முன்னெடுத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை வழிநடத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2005-ம் ஆண்டு என்சிஇஆர்டியின் தேசிய பாடத்திட்டம் வடிவமைப்பிலும் பங்களிப்பு செய்துள்ளார்.
அதேபோல், அறிவியல் பரப்புரை பணிக்காக 2020-ம் ஆண்டு இவருக்கு இந்திரா காந்தி விருது தரப்பட்டது. இதுதொடர்பாக பேராசிரியர் ராமானுஜம் கூறும்போது, ‘‘வாழ்நாள் விருது என்றாலே அது எந்த தனிமனிதரின் சாதனையாகவும் இருக்க முடியாது. பள்ளிக்கல்வியிலும், அறிவியல் பரப்புதலிலும் நான் கற்றுக்கொண்டது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம்தான். எனவே, இந்த விருதை அறிவியல் இயக்கத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்’’ என்று தெரிவித்தார்.