

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜனவரி 15,16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் முதல்முறையாக பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இதனால் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடந்துவந்த ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தேக்கமடைந்தன.
அரசின் திடீர் கட்டுப்பாடுகளால் ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகம் விழாக் கமிட்டியினர், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களிடம் ஏற்பட்டது.
இதற்கிடையே எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டை நிறுத்தி விடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் முதல்வருக்கு கோரிக்கைகள் விடப்பட்டன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா கமிட்டி முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பொங்கலை முன்னிட்டு பாலமேடு, அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும். இதுகுறித்த அனுமதி கோரும் கோப்பு முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று (நேற்றிரவே) அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு அரசின் வழிகாட்டுதலோடு பார்வையாளர்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும்.
உள்ளூர் அளவில் காளைகள், மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் உள்ளிட்டோர் பங்கேற்பர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணி இன்று முதல் தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.
இதே கட்டுப்பாடுகளை பின்பற்றி, பார்வையாளர் இன்றி மதுரை அவனியாபுரத்திலும் ஜனவரி 14-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.