

நீலகிரி மலைப்பாதைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் எதிரே வரும் வாகனங்களை எச்சரிக்கும் கருவியை சோதனை முறையில் நெடுஞ்சாலைத் துறையினர் பொருத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் பிரதான சாலைகளான மேட்டுப்பாளையம்-குன்னூர் வரையிலான சாலையில் 14, மேட்டுப்பாளையம்-கோத்தகிரி வரையிலான சாலையில் 4, உதகை-மசினகுடி சாலையில்36 என கொண்டை ஊசி வளைவுகள்உள்ளன. அபாயகரமான வளைவுகளில் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள், சாலையோரங்களில் உள்ள பள்ளங்களில் கவிழ்ந்து விபத்துகள் அரங்கேறின. குறிப்பாக உதகை-மசினகுடி சாலையான கல்லட்டி மலைப்பாதையில் மட்டும்கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 77விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்துகளை தடுக்கும் வகையில் உதகை-கோத்தகிரி சாலையில் எதிரே வரும் வாகனங்களை கண்டறிந்து எச்சரிக்கும் வகையில் சோலார் உதவியுடன் இயங்கும்கருவியை நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ளது. எல்இடி திரையில்வாகனங்கள் வருகை குறித்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறும்போது, ‘‘நீலகிரிமலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
இதைத்தடுக்க சோலார் மூலம் இயங்கும் ‘ஸ்மார்ட் லைட்’ கம்பங்கள் நிறுவப்பட்டு, இரு துருவங்களும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரேடார் அமைப்புகள் மூலம் எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை கண்டறிந்த பின் இருபுறமும் வரும் வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் விதமாக ஒலி எழுப்பும். சோதனை முறையாக நீலகிரி மாவட்டத்தில் உதகை- கோத்தகிரி சாலையில் 2 இடங்களில் இந்த கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றிபெற்றால், பல இடங்களில் இக்கருவி பொருத்தப்படும்,’’ என்றார்.