Published : 09 Jan 2022 06:04 AM
Last Updated : 09 Jan 2022 06:04 AM

நில அபகரிப்பு புகார்களை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு: சிஎம்டிஏ மற்றும் நகரமைப்புத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

சென்னை

நிலஅபகரிப்புப் புகார்களை அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகரமைப்புத் துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெருங்களத்தூரில் எனக்குச் சொந்தமான 7 சென்ட் நிலம் உள்ளது. எனது இடத்துக்கு அருகில்உள்ள இடத்தை பம்மலைச் சேர்ந்த சுனில்போத்ரா என்பவர் கடந்த 2009-ல் வாங்கி, பொதுப் பாதையை அபகரித்தார். அதையடுத்து, தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த பொதுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள 2017-ல் அனுமதி பெறப்பட்டது.

ஆனால், திடீரென என்னுடைய இடம் மற்றும் பொதுப் பாதையை அபகரித்து வீட்டு மனைகளாக மாற்றி, சிலர் விற்பனை செய்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை மறைத்து, சட்டவிரோதமாக வீட்டுமனைக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

நில அபகரிப்பு தொடர்பானபுகாரை அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தி, அபகரிப்பில் ஈடுபடுபவர்களுடன் கூட்டணி அமைத்து, நில உரிமையாளர்களை மோசடி செய்கின்றனர். எனவே, என்னுடைய இடத்துக்கு, எனது அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ள வீட்டு அடிமனைக்கான மனை அங்கீகார ஒப்புதலை ரத்து செய்யக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமும், என்னுடைய இடத்தை மூன்றாவது நபர்களின் பெயர்களுக்கு பத்திரப் பதிவு செய்யக் கூடாது என படப்பை சார் பதிவாளரிடம் மனு அளித்தும், எந்தப் பயனும் இல்லை.

என்னுடைய இடத்தை அபகரிக்க அதிகாரிகள் மறைமுகமாக துணை போயுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது இடத்துக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு அடிமனைக்கான அங்கீகாரத்தையும், ஒப்புதலையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் ஆஜராகி, "நில அபகரிப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை. அதிகாரிகள் தங்களது கடமையை சரியாக செய்ய தவறுவதால்தான் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைமை ஏற்படுகிறது" என்றார்.

அதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகரமைப்புத் துறை இயக்குநர், பெருங்களத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x