

கரோனா பரவலைத் தடுக்க, சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. கரோனா தடுப்பூசி 2 தவணை போட்டிருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னைபுறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க நாளை (ஜன. 10) முதல் புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, கரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை புறநகர் ரயில்களில் 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். யூடிஎஸ் செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
பயணிகள் கரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். நாளை அதிகாலை 4 மணி முதல் வரும் 31-ம் தேதி நள்ளிரவு வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். பயணிகள் கூட்ட நெரிசலின்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பயணிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.