

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் அதிமுகவின் நீண்ட நாளைய இடைவிடாத கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் வரும் மருத்துவச் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அளிக்காததை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், அதிமுக சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்பிரச்சினை குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை அமைக்க 2020,ஜூலை 27-ல் மத்திய அரசுக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய வெற்றிக்கு இதுவே அடித்தளம்.
17 ஆண்டுகாலம் மத்திய அரசில் அங்கம் வகித்து, இதற்காக ஒரு குரல் கூட எழுப்பாத திமுக, சுயநலத்துக்காக பொதுநலத்தை தாரை வார்த்த திமுக, அதிமுகவின் நீண்ட நாள் போராட்டத்தினால், வலியுறுத்தலினால் கிடைத்த வெற்றியை தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்கிறது.
ஜெயலலிதா 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானமான 50%இடஒதுக்கீடு, மத்திய அரசு வேலைவாய்ப்பிலும், கல்வி நிலையங்களிலும் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் வரும் மருத்துவச்சேர்க்கையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவும் இடஒதுக்கீட்டில் இடம்பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்யவும் அதிமுக குரல் கொடுக்கும்.
திமுகவுக்கு கிடைத்த வெற்றி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: அகிலஇந்திய அளவில் மருத்துவக்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்துஇருப்பது திமுகவின் வெற்றியாகும். இதற்குக் காரணமான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய இத்தீர்ப்பை திமுக பெற்றதன்மூலம், காலங்காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதி மீண்டும் நமக்குக் கிடைத்துள்ளது.