

அதிமுகவை நோக்கி திமுக வைக்கும் முக்கிய விமர்சனங்களில் ஒன்றான காலில் விழும் கலாச்சாரம் திருச்சி திமுகவையும் பற்றிக் கொண்டுள்ளது.
திருச்சியில் திமுக சார்பில் மேற்குத் தொகுதி கூட்டணிக் கட்சிகளின் தலைமை தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. தில்லை நகர் வடக்கு விரிவாக்கப் பகுதியில் மாநகராட்சிப் பூங்காவுக்கு எதிரே உள்ள திமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகம், நல்ல நேரம் பார்த்து சரியாக காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டது.
கட்சிக்காக பல தேர்தல்களில் பணியாற்றியவரும், கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினருமான ஆர்.பழனிவேல் (74), ரிப்பனை வெட்டி அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன், மமக மாவட்டச் செயலாளர் பயஸ், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் சங்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சேகர் உட்பட திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
காலில் விழுந்த வேட்பாளர்கள்
அப்போது, பழனிவேல் மற்றும் சக திமுக வேட்பாளர்களுக்கு திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளரும், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவும், நேருவுக்கு வேட்பாளர்களும் பரஸ்பரம் சால்வை அணிவித்தனர்.
லால்குடி சவுந்திரபாண்டியன் எம்எல்ஏ, ரங்கம் பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் கணேசன், திருவெறும்பூர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கே.என்.நேருவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
கே.என்.நேருவிடம் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் பலரும் மகேஷ் பொய்யாமொழியுடன் உள்ளனர். அதேபோல, கே.என்.நேருவும், மகேஷ் பொய்யாமொழியும் தனித்தனி அணியாக திருச்சி திமுகவில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், கே.என்.நேருவின் காலில் மகேஷ் பொய்யாமொழி விழுந்ததைக் கண்டு கட்சியினர் ஆச்சரியம் அடைந்தனர்.
தொடர்ந்து, தேர்தல் அலுவலகத்துக்குள் அனைவரும் நுழைந்தபிறகு, பழனிவேலுக்கு மீண்டும் சால்வை அணிவித்த கே.என்.நேரு, அவரது காலில் விழுந்தார்.
புதிய வேட்பாளர்கள்தான் கே.என்.நேருவின் காலில் விழுந்தனர் என்றால், தொடர்ந்து 2-வது முறையாக எம்எல்ஏ-வாக உள்ள சவுந்திரபாண்டியன் கே.என்.நேருவின் காலில் விழுந்ததும், பழனிவேல் காலில் கே.என்.நேரு விழுந்ததும், அதிமுகவை நோக்கி திமுக வைக்கும் விமர்சனங்களில் ஒன்றான காலில் விழும் கலாச்சாரம் திமுகவையும் பற்றிக்கொண்டதை வெளிக்காட்டியது.
எல்லாம் மஞ்சள் மயம்
கடவுள் மறுப்புக் கொள்கையிலும் திமுக தளர்ந்து வருவதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழும் நிலையில், தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியிலும் அதைக் காண முடிந்தது.
திறப்பு விழாவுக்கு மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. அதை வெட்டுவதற்கு மஞ்சள் நிற கைப்பிடி கொண்ட கத்தரிக்கோல் பயன்படுத்தப்பட்டது. அதேபோல, அலுவலகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த பெரிய ஃபிளக்ஸ் போர்டில், பெரும்பாலான பகுதிகளை மஞ்சள் நிறமே ஆக்கிரமித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக புத்தம் புதிய மஞ்சள் நிற சட்டையை கே.என்.நேரு அணிந்திருந்தார். திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தெரிந்தோ, தெரியாமலோ மஞ்சள் நிற இனிப்பு, காரம் (மிக்ஸர், லட்டு) வழங்கப்பட்டது.