Published : 06 Apr 2016 01:21 PM
Last Updated : 06 Apr 2016 01:21 PM

பணத்துக்காக கட்சி மாறும் எண்ணம் இல்லை: நீக்கப்பட்ட தேமுதிக நிர்வாகிகள் விரிவான விளக்கம்

"திமுகவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. திமுக கூட்டணியில் தேமுதிக சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் கூறியுள்ளார்.

மேலும், தேமுதிக கட்சியே பிரேமலதாவின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களை நீக்கியது செல்லாது

''ஒட்டுமொத்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்தைதான் நாங்கள் வெளியிட்டோம். ஆனால், இந்த கருத்துகளை வெளிப்படுத்தியமைக்காக எந்த விளக்கமும் கேட்காமல் குறிப்பாக நோட்டீஸ் கூட கொடுக்காமல் எங்களை நீக்கியுள்ளனர்.

அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது எந்த விதத்திலும் எங்களைக் கட்டுப்படுத்தாது;செல்லாது.

ஏனென்று சொன்னால் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 9 பேர் இருக்கிறார்கள். உயர் மட்டக் குழுவில் 14 பேர் இருக்கிறார்கள். மொத்தம் 23 பேர் கொண்டதுதான் ஒழுங்கு நடவடிக்கைக் குழு. அந்த குழுவில் இருப்பவர்கள் நாங்கள் 5 பேர் இங்கு இருக்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ளவர்களின் கருத்தை கேட்காமல் நீக்கும் சட்ட விதிகள் தேமுதிகவில் கிடையாது. கட்சியின் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் வரையிலும் தவறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்றால், அப்போது கூட இந்த 23 பேரின் பரிந்துரையின் பேரில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், இந்த அடிப்படை விதிகள் எதையுமே பின்பற்றாமல் ஒட்டுமொத்தமாக எங்களை, திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக கட்சியினரின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கியிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

நேற்று கூட எங்களைக் கண்டித்து சட்டமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட செயலாளார்களையும் வரவழைத்து பேட்டி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மூலம் வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்டிய பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். அவர்கள்தான் தற்போது எங்களுக்கு எதிராக பேசுகின்றனர்.

எங்களிடத்தில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் யாரிடத்திலோ பணத்தைப் பெற்றுக்கொண்டு பேசுவதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

அதிமுகவுக்கு 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தேமுதிகவில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், அன்றைக்கெல்லாம் ஒரு பேட்டி கொடுப்பதற்கு கூட அனுமதியை கட்சித் தலைமை கொடுக்கவில்லை.

ஆனால், இன்று நாங்கள் ஒரு கருத்து சொன்னவுடன் அந்த தாக்கம் தமிழகம் முழுக்க செல்கிறது, வரவேற்பு கிடைக்கிறது என்பதற்காக பயந்துபோய் மாவட்ட செயலாளர்களை, எம்எல்ஏக்களை பேட்டி கொடுக்க தேமுதிக தலைமை அனுமதி அளிக்கிறது. கட்டாயப்படுத்தி பேட்டி கொடுக்க தலைமை சொல்கிறது.

பணத்துக்காக கட்சி மாறும் எண்ணம் இல்லை

நாங்களெல்லாம் பணத்தை பெற்றுக்கொண்டு கட்சி மாற வேண்டும் என்று சொன்னால் அதிமுக ஆட்சியிலேயே எங்களுக்கு விலை பேசினார்கள். நிர்பந்தம் செய்தார்கள். நெருக்குதல் கொடுத்தார்கள். ஆனால், விஜயகாந்த் தான் முக்கியம் என்று இருந்தோம். பணத்துக்காக கட்சி மாறும் எண்ணம் எங்களுக்கு எள்ளளவும் கிடையாது.

கடந்த 3 வருடங்களில் யாரும் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்படவில்லை. தற்போது கூட மாவட்ட செயலாளர்கள் அவர்களாகவே ராஜினாமா செய்துவிட்டு செல்கின்றனர்.

அதிமுகவுக்கு மாறிய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக கொடி கட்டிய கார்களில் வலம் வந்தனர். ஜெயலலிதா புகைப்படத்தை பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டனர். நாங்கள் இன்றைக்கும் விஜயகாந்த் படத்தைதான் வைத்திருக்கிறோம். தேமுதிக வேட்டி அணிந்திருக்கிறோம். ஏன் இந்த பாரபட்சம்?

வைகோவுக்கு தகுதி இல்லை

வைகோ முதலில் அவர் கட்சியில் இருக்கும் பிரச்சினைகளைப் பார்க்கட்டும். எங்கள் கட்சியில் இருக்கும் உட்கட்சிப் பிரச்சினை பற்றிப் பேச வைகோவுக்கு யோக்கியதையும் இல்லை; அருகதையும் இல்லை.

வைகோவுக்கு ஒரு கேள்வி

திமுகவில் இருந்து பிரிந்து வந்து வைகோ மதிமுக ஆரம்பித்தார். அவர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் கட்சி ஆரம்பித்ததாக ஒப்புக்கொள்வாரானால் நானும் அவர் கருத்துக்கு உடன்படுகிறேன். அவர் சொன்ன குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கிறேன்.

எங்கள் தலைவர் விஜயகாந்த் தான்

எந்த நிலையிலும் திமுகவுக்கு போவதாக நாங்கள் சொல்லவில்லை. தேமுதிகவில் இருந்து நீக்கினாலும் இந்த கரை வேட்டியை நாங்கள் கழற்றமாட்டோம். விஜயகாந்த் படம்தான் எங்கள் சட்டை பாக்கெட்டில் இருக்கும். இன்றைக்கும் எங்கள் தலைவர் விஜயகாந்த் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை.

பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கிறது

விஜயகாந்த் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தால் இப்படிப் பேச வேண்டிய சூழல் வந்திருக்காது. தேமுதிக கட்சி முழுக்க முழுக்க பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி உருவாகக் காரணம் பிரேமலதா தான். தலைவர் விஜயகாந்துக்குப் பிடிக்காத, நிர்வாகிகளுக்குப் பிடிக்காத, தொண்டர்களுக்குப் பிடிக்காத தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது பிரேமலதாதான். இதை பகிரங்க குற்றச்சாட்டாகவே சொல்கிறேன்.

இனியாவது கட்சி திருந்தட்டும்

இன்றைக்கு தேமுதிக இயக்கம் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மிகப் பெரிய தோல்வியடையும் நிலைக்கு சென்று இருக்கிறது. இந்தக் கூட்டணியில் விஜயகாந்த் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற முடியாது. 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற முடியாமல் இருப்பதற்கா ஒவ்வொரு வேட்பாளரையும் 25 லட்சம் ரூபாய் செலவழிக்க சொல்கிறீர்கள்? உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்தால் இப்படி செய்வீர்களா? இதற்கு மட்டும் தேமுதிக தலைமை பதில் சொல்லட்டும்.

இன்னும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இனியாவது கட்சி திருந்தட்டும். திமுகவுடன் தேமுதிக உடன்பாடு வைத்துக் கொள்ளட்டும்.

எங்களை நாங்களே அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்கள் நலனுக்காகவும், கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் தேமுதிக, திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும்.

திமுக கூட்டணி குறித்து விஜயகாந்த் கேட்டது எதற்காக?

வேட்பாளர் நேர்காணலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லலாமா? என்று விஜயகாந்த் கேட்டது எதற்காக?

திமுகவின் முக்கிய பிரமுகரை இல்லத்துக்கு அழைத்து வந்து உங்களுடன் வரத் தயார். 20 நாட்கள் பொறுத்திருங்கள் என்று விஜயகாந்த் சொன்னார்.

அந்த அடிப்படையில்தான் திமுக தலைவர் கருணாநிதி பழம் கனிந்து கொண்டிருக்கிறது. வெகுவிரைவில் பாலில் விழும் என்று சொன்னார்.

இதையெல்லாம் ஏன் விஜயகாந்த் செய்தா? சொன்னார்? என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் ஏற்பட்டிருந்தால் அந்த தவறை திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

திமுகவுடன் கூட்டணி வேண்டும். ஏன்?

ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்த போதே தமிழக மக்கள் நலனுக்காக அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைத்துக் கொண்டது. அதே குறிக்கோளுடன் தேமுதிக, திமுகவுடன் கூட்டணியில் இணைய வேண்டும்.

அதிமுக ஆட்சியில் பால் கட்டணம், மின் கட்டணம் உயரும் போது எப்படி எதிர்ப்பு குரல் கொடுத்தோமோ அதே போல, திமுக ஆட்சியில் தவறுகள் நிகழ்ந்தால் தட்டிக் கேட்கலாம். இதுதான் எங்கள் நோக்கம்.

தலைவர் சொன்னதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மரபுதான். ஆனால், தொண்டர்கள் முடிவை தலைவரும் எடுக்க வேண்டும். அதை விஜயகாந்த் செய்யவில்லை.

கட்சி நிகழ்ச்சியை கல்லூரிக்குள் கொண்டுவரக்கூடாது என்று சொன்னார். ஆனால், இப்போது ஆண்டாள் அழகர் கல்லூரியில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடத்துகிறார். பிரேமலதாவின் கட்டுப்பாட்டுல் தேமுதிக சென்றுவிட்டதே இதற்குக் காரணம். விஜயகாந்தை இயக்குவது பிரேமலதாதான். விஜயகாந்த் மூலம் கட்சியை இயக்குகிறார்.

தேமுதிக, திமுகவுடன் சேர வேண்டும்

திமுக விஜயகாந்துக்கு பணம் கொடுக்கவில்லை. அப்படி கூறுவது தவறான தகவல்.

பாஜக தேமுதிகவின் சில கோரிக்கைகளை ஏற்கவில்லை. மக்கள் நலக் கூட்டணி அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. இதனாலேயே தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி உருவானது.

குடும்பம், குழந்தைகளுடன் இருந்ததை விட தலைவர் விஜயகாந்துடன் அதிக நேரம் இருந்திருக்கிறேன். கார் வாங்க கூட காசில்லாமல் வங்கியில் கடன் வாங்கினேன். தேமுதிகவால் என் வாழ்வை இழந்திருக்கிறேன்.

அதிமுகவுக்கு சென்ற தேமுதிகவினர் பிழைக்கத் தெரிந்தவர்கள்.

தேமுதிக நிர்வாகிகள் நிறைய பேர் வருகிறார்கள். அவர்களுடன் பேசி முடிவெடுத்து பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், திமுகவில் சேரவில்லை. திமுகவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தேமுதிக, திமுகவுடன் சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x